காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு; சென்னையில் 24 விமானங்கள் தாமதம்.!!!

செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் இன்று காலையில் கடுமையான  பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இன்று காலையில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சென்னை - திருச்சி தேசிய  நெடுஞ்சாலையிலும் பனியால் மறைக்கப்பட்டிருந்தது. சாலையோர மரங்கள், ஆற்று பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக தெரியவில்லை.

 இதனால் செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், செய்யூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பஸ், லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர். விவசாய பயிர்களிலும் பனி படர்ந்துள்ளது. இதனால் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் இதர வேலைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர். வாக்கிங் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.

இதே போன்று கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு  படிப்படியாக பனி மூட்டம் குறைந்தது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், காலையில் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். எதிரே வருபவர் கூட தெரியாத அளவுக்கு, புகை மண்டலம் போல பனி இருந்தது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைகளில் கடும் மூடுபனி நிலவியது. இதன் காரணமாக, ரயில்களை மெதுவாக செலுத்த அனைத்து ரயில் ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. எனவே, திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக சென்ற மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் மிகவும் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் 24 விமானங்கள் தாமதம்

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் அதிகளவில் பனிப்பொழிவு இருந்தது. சென்னை விமானநிலைய ஓடுபாதை பகுதிகளிலும் இந்த பனிமூட்டம் காணப்பட்டதால் விமானங்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து காலை 6.05 மணிக்கு மும்பை, 6.10 மணிக்கு டெல்லி, 6.15 மணிக்கு அகமதாபாத், 6.30 மணிக்கு புனே, மும்பை, மதுரை, ஹுப்லி, 6.35 மணிக்கு புவனேஸ்வர், 6.40 மணிக்கு ஐதராபாத், 6.45 மணிக்கு டெல்லி, 7 மணிக்கு திருச்சி, 7.05 விசாகப்பட்டினம் ஆகிய 12 விமானங்கள் சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், நாக்பூர், டெல்லி உள்ளிட்ட 4 விமானங்களும் தாமதமானது. மும்பையில் இருந்து 52 பயணிகளுடன் இன்று காலை 8 மணிக்கு சென்னை வந்த ஏர்ஏசியா விமானம், பெங்களூரில் இருந்து 46 பயணிகளுடன் காலை 7.50 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும் டெல்லியில் இருந்து வந்த 2 விமானங்கள், கொல்கத்தா, துபாயில் இருந்து வந்த விமானம் பெங்களூர் மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. வானிலை சீரடைந்த பின்பு மீண்டும் சென்னைக்கு திரும்பியது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே உள்ள டாக்ஸி எனப்படும் சர்வீஸ் சாலையில் இயக்கப்படும் ஃபாலோமீ வாகனம், விமானத்தில் ஏற்றுவதற்காக உணவு பொருட்கள், லக்கேஜ்களை எடுத்து வரும் வாகனங்களும் முகப்பு விளக்குகள் மற்றும் மஞ்சள் விளக்குகளை எரிய விட்டபடி குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டன.

Related Stories: