சொத்தவிளை கடற்கரையில் ஆமை இறந்து கரை ஒதுங்கியது

நாகர்கோவில் : ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் சிற்றாமைகள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் முடிய குமரி மாவட்ட கடற்கரைகளில் வந்து முட்டையிடும். இந்த ஆமையைப் பிடித்து இறச்சியை உண்ணுவதும், அதை விற்பதும், ஆமை முட்டைகளை எடுத்து விற்பனை செய்வதும் நடைபெற்று வருகிறது.  இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைந்து விட்டதால் இதைப் பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரையில் ஆமை ஒன்று இறந்து கரையொதுங்கியுள்ளது. இறந்த ஆமையின் உடலில் தலை முழுவதுமாக இல்லை. வயிற்றின் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து உடல் வீங்கியிருந்தது.

இதுபற்றி ஐயுசிஎன் தெற்கு ஆசிய பகுதியின் உறுப்பினர் டேவிட்சன் சற்குணம் கூறுகையில், ‘சிற்றாமைகள் கடலின் துப்புரவு பணியாளர்கள். கடலில் இறந்த மீன்கள், இறந்த செடி கொடிகள் ஆகியவற்றை உணவாக்கி கடலை துப்புரவு செய்கின்றன. மீன்பிடி கலங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாழிடங்கள் அழிக்கப்படுதல் போன்றவற்றால் ஆமைகளின் எண்ணிக்கை குறைவதுடன் ஆமைகள் அச்சுறுத்தப்படுகின்றன.

ஆமைகளைப் பாதுகாக்க போதிய விழிப்புணர்வை மீனவர்கள், கடற்கரை அருகில் வாழும் மக்கள், கல்வி நிறுவனங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் ஆமைகள் குறித்த முக்கியத்துவத்தையும், அவற்றை பாதுகாக்க வேண்டிய இன்றியமையாத தேவையையும் எடுத்துரைத்து ஆமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: