ஆமை வேகத்தில் நடக்கும் ரயில்வே மேம்பால பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-விரைந்து முடிக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் மேம்பால பணிகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியில்  ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் இருந்தும், கிராம ஊராட்சி பகுதியில் இருந்தும் பல்வேறு காரணங்களுக்காக பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த பாதையை நாள்தோறும்  கடந்து சென்று வருகின்றனர்.

இதனால் அடிக்கடி ரயில்வே கேட் போடுவதால் அனைத்து தரப்பினரும் மணிக்கணக்கில் காத்திருந்து ரயில் பாதையை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு வந்தது. பின்னர் இதுகுறித்து பொதுமக்களும், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு முதல் இங்கு உள்ள ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பலதரப்பு மக்களும் தண்டவாளத்தை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் ஆபத்தான வழிகளில் தண்டவாள பாதையை கடக்கும் அவலம் நிலவுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: