வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் வாகனங்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள்-நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் :  வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பைக், மற்றும் சில கார், ஆட்டோ, மினி பஸ், லாரிகளில் காதை பிளக்கும் வகையிலான ஏர் ஹாரன்கள்’ பயன்படுத்தப்படுகின்றன.

சில வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும், இசை வடிவிலான ஹாரன்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏர் ஹாரன்கள் எழுப்பும் மிக அதிக சத்தம், முன்னால் செல்லும் வாகன ஓட்டிகளை, குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகளை, திக்குமுக்காட செய்கிறது. மேலும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். சப்தம் தாங்காமல், பாதசாரிகளும், தங்கள் காதுகளை, பொத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

இருதய பிரச்னை உள்ளவர்களின் நெஞ்சை பதற வைத்து, அவர்களுக்கு மாரடைப்பை உண்டாக்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு மனிதனின் காதுகளுக்கும், குறிப்பிட்ட சப்தத்துக்கு மேல் ஒலியை கேட்கும் திறன் இல்லை. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கூட இந்த ஒலி மாசு பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக ஒலியால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களில் இருந்து 90 டெசிபல் திறனுக்கு குறைவான ஹாரன் ஒலிப்பான்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ₹5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் முடியும். இவ்வாறு சட்டம் அமலில் இருந்தும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சில பைக்குகள், மினி பஸ்கள், லாரிகள், ஆந்திரா, கர்நாடகா பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் அதிக ஒலி மட்டுமின்றி அபாயகரமான ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.

பல வாகனங்களில், ‘ஏர் ஹாரன்’களுடன், இரும்புக் குழாய் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 200 டெசிபல் திறன் வரை ஒலி எழுப்பப்படுகிறது. ஒலி மாசு ஏற்படுத்த, சட்டத்தில் இடமில்லை’ என்ற நிலையில், ஒலி மாசு ஏற்படுத்தும் ‘ஏர் ஹாரன்’களை பல நிறுவனங்கள் தயாரித்து, விற்பனை செய்கின்றன.

ஏர் ஹாரன் உற்பத்தியை முற்றிலும் நிறுத்த வேண்டும். அல்லது கடைகளில் ஏர் ஹாரன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, ஏர் ஹாரன்களால் எழும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் கூறினர்.இந்திய வாகன சட்ட திட்டங்களை பொறுத்தவரையில், கார் அல்லது பைக் போன்ற வாகனங்களில், எந்த வகையான மாற்றங்களையும் செய்யக்கூடாது. வாகனங்களில் மாற்றங்கள் செய்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களால் அதில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்து நேரிடலாம். அந்த வகையில் சில பைக்குகளில் அலறும் சைலன்சர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் சாலையில் செல்பவர்களை பதற வைக்கிறது.

காவல்துறை வாகன சோதனையின்போது ஹெல்மெட், லைசென்ஸ், இன்சூரன்ஸ் பார்ப்பது போல், பைக்குகளில் ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா? என்பதையும் கண்காணித்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்களும் இதை கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: