நள்ளிரவில் நாய், ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை-மதுக்கரை பகுதி மக்கள் பீதி

கோவை : கோவை மதுக்கரை பகுதியில் சிறுத்தை நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து நாய், ஆடுகளை கடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.

கோவை மதுக்கரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபிஸ் என்னும் பகுதியில் யானை மற்றும் சிறுத்தை அடிக்கடி உலா வருகின்றன. இவை, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு நள்ளிரவில் வருவதும், பின்னர் வனத்துக்குள் நுைழவதும் வாடிக்கையாக உள்ளது. ஊருக்குள் புகும் காட்டு யானைகள், வாழைமரம், சோளத்தட்ைட உள்ளிட்ட தீவனங்களை தின்று, தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனத்துக்குள் சென்று விடுகின்றன.

யானையை தொடர்ந்து ஊருக்குள் புகும் சிறுத்தை, குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆடு, கோழி மற்றும் நாய்களை வேட்டையாடுகின்றன. இப்பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றுள்ளது. 5க்கும் மேற்பட்ட நாய்களும் பலியாகியுள்ளன.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் குவாரி ஆபீஸ் காந்தி நகர் பகுதிக்குள் ஒரு சிறத்தை புகுந்தது. அங்குள்ள தமிழன்னை வீதியில் வசிக்கும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் சீனிவாசன் என்பவரது வீட்டிற்கு வெளியே படுத்திருந்த நாயை கடித்து குதறியது. நாய் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, நாயை, சிறுத்தை கடித்து குதறிக்கொண்டிருந்தது. கூச்சல் போட்டு, சிறுத்தையை துரத்தினர். சிறுத்தையின் தாக்குதலில் நாய்க்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடி வருகிறது.

பின்னர், அங்கிருந்து தப்பிய சிறுத்தை மிலிட்டரி கேம்ப் எதிரேயுள்ள மட்டப்பாறை தோட்டம் ஞானபிரகாஷ் என்பவர் வீட்டின் ஆட்டு பட்டியில் இருந்த 17 ஆடுகளில் 4 ஆடுகளை கழுத்து பகுதியை கடித்தது. அதில் 3 ஆடுகள் இறந்தன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி சிறுத்தை வருவதால், ஊர் மக்கள் உயிர் பயத்தில் தவிக்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் வெளியே வர அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மலையை ஒட்டி எங்கள் வீடுகள் இருப்பதால் இரவு நேரம் மட்டுமல்ல, பகல் நேரத்தில்கூட சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக வந்து, போகிறது. நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம். முதலில் ஆட்டை கடித்த சிறுத்தை, இப்போது நாயை கடித்துள்ளது. அடுத்து மனிதர்களை கடிக்கும் நிலை உருவாகும். அதற்குள் வனத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சிறுத்தையை பிடிக்க கூண்டு

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தல் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, ஆடுகளின் கழுத்து பகுதியில் சிறுத்தை கடித்து இருப்பதற்கான அடையாளமும், நகக் கீரல்கள் இருந்தன. மேலும், சிறுத்தை வந்து சென்றதற்கான தடைமும் இருந்தது. இதனால், அப்பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கேமிரா பொருத்தப்பட்டு  சிறுத்தை கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிறுத்தை சுவரில் ஏறும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related Stories: