அரவக்குறிச்சி பகுதியில் அமராவதி அணை திறப்பால் விவசாய பணிகள் மும்முரம்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் மழை மற்றும் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இதனால் விவசாய பணிகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் கடந்த வருடம் மழை பொய்த்து போனதால் அமராவதி மற்றும் நங்காஞ்சி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் வற்றிவிட்டது. இதனால் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டது. விவசாய கிணறுகள், வீடு மற்றும் பொது இடங்களில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமலும், கால்நடை தீவனங்கள் மகசூல் இல்லாமலும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 மேலும் அமராவதி ஆற்றில் கரையோர பகுதியில் அதிக மழை பெய்ததன் காரணமாக தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்து கொண்டிருக்கிறது. இதனால் அரவக்குறிச்சி வட்டத்தின் சுற்றுப் பகுதியில் நிலத்தில் நீருற்று அதிகரித்து விவசாயக் கிணறுகள், வீடு மற்றும் பொது இடங்களில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளிலும் கடந்த ஒரு வருடமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக பழுதடைந்த மின்மோட்டர்களை சரிசெய்தும், நீண்ட நாட்களாக சர்வீஸ் செய்யப்படாத மோட்டார்களை சர்வீஸ் செய்து சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு வருடாமாக வரட்சியின் காரணமாக தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தோம்.

கால்நடைகளுக்கு தீவனப்புல் கூட வளர்க்க முடியாமல் சிரமப்பபட்டோம். தற்பொழுது பெய்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு போதுமான தண்ணீர் பாய்ச்ச முடிகிறது.

தற்போது இந்த தண்ணீரை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தேவையான அடர் பயிரான சோளம், கம்பு, தட்டை தீவணங்கள் மற்றும் புட்கள் வளர்க்க முடியும். தோட்டங்களில் வெங்காயம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட தேவையான பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்றனர்.

Related Stories:

>