×

கர்நாடக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் 7பேருக்கு துறைகள் ஒதுக்கீடு: இலாகா மாற்றத்தால் சிலர் அதிருப்தி

பெங்களூரு: நீண்ட இழுபறிக்கு இடையே காலியாக இருந்த அமைச்சர் பதவிகள் நிரப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஏற்கனவே வகித்து வந்த சிலரது துறைகளும் மாற்றம் செய்யப்பட்டதால் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நாளை என இழுத்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த  கடந்த 13ம்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.  பாஜ ஆட்சி அமைவதற்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்டிபி நாகராஜ் மற்றும் சிபி யோகேஸ்வர், முருகேஷ் நிராணி உள்ளிட்ட 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கம் நடந்தாலும் முதல்வர் எடியூரப்பா புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்காமல் இருந்தார். புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள எம்டிபி நாகராஜ் தனக்கு வீ்ட்டுவசதி துறைதான் வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் இருந்தார். அதே நேரம் சோமண்ணா அது தன்னிடம் இருந்து  பறிபோகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஒவ்வொருவரும் தங்கள் துறையை பறித்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி வந்தனர்.இது போல் புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த துறைகள் வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக துறைகள் ஒதுக்கீடு நடைபெறுவதில் சிக்கல் நீடித்தது.

இதற்கிடையே முதல்வர் எடியூரப்பா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, வருவாய்துறை அமைச்சர் அசோக் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டாலும் அமைச்சர் எம்டிபி நாகராஜ் தனக்கு வழங்கியுள்ள கலால்துறை தேவையில்லை என்று தொடர்ந்து லாபி நடத்தினார். அது போல் அமைச்சர் மாதுசாமி தன்னிடம் இருந்த பேரவை விவகார துறை பறிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார். அமைச்சர் கோபாலய்யா உணவு துறை தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அத்துடன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அடம் பிடித்தார்.

இவ்வாறு அமைச்சர்கள் மாதுசாமி, கோபாலய்யா, எம்டிபி நாகராஜ் மற்றும் டாக்டர் சுதாகர் உள்ளிட்டோர் முதல்வர் எடியூரப்பாவின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும் அவர்கள் அமைச்சர் சுதாகர் வீட்டில் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று அமைச்சர்கள் அசோக் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் அதிருப்தி அமைச்சர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். அமைச்சர் முருகேஷ்நிராணியும் அதிருப்தி அடைந்த அமைச்சர்களை சமாதானம்செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கோபாலய்யா, எம்டிபி நாகராஜ் ஆகியோர் சமாதானம் அடைந்தனர்.

அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறைகள் ஒதுக்கீடு விஷயத்தில் அதிருப்தி எழுந்த நிலையில் விதான சவுதாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்கு  முன்பாக முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறைகள் ஒதுக்கீட்டில் எந்த பிரச்னையும் கிடையாது. அமைச்சர் எம்டிபி நாகராஜ் கலால் துறை எனக்கு விரும்பம் இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து பிறகு பரிசீலனை செய்யப்படும்.  புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டு விட்டன. துறை ஒதுக்கீட்டில்  யாரும்  அதிருப்தி அடையவில்லை என்றார். முதல்வர் எடியூரப்பா இவ்வாறு கூறினாலும் அமைச்சர் எம்டிபி நாகராஜ்  தனக்கு கலால் துறை அமைச்சராக பதவி வகிப்பதில் விருப்பம் கிடையாது என்று அதிரடியாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது தலையீடு இல்லை
- விஜயேந்திரா தகவல்
முதல்வரின் மகனும் பாஜ துணை தலைவருமான விஜயேந்திரா கூறுகையில், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மாற்றம் தொடர்பாக எனது தலையீடு எதுவும் இல்லை. முதல்வர் எடியூரப்பா 40 ஆண்டு கால நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவர்.  யார், யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதன்படி சுதந்திரமாக அவர் செயல்பட்டுள்ளார் என்றார்.

Tags : ministers ,Karnataka , New Ministers in the Cabinet of Karnataka 7 Departments per person: Some dissatisfied with the change of portfolio
× RELATED இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்கீடு...