போலீசை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

பெங்களூரு: பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேடரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஜனவரி 17-ம் தேதி தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தக்காளி விற்பனை செய்யும் கடைக்குள் நுழைந்து கடையின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ்பாட்டீல் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் பதுங்கியுள்ள இடம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்துக்கு சென்று சரணடைய அறிவுறுத்தினர்.

ஆனால் ராஜேஷ் தலைமை காவலர் சீனிவாஸ் மீது கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்றார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் தப்பிசெல்ல முயன்ற ராஜேசை சரணடையும்படி எச்சரித்தார். இருந்தும் ராஜேஷ் தப்பிசெல்வதிலேயே குறியாக இருந்தார். இதனால், இன்ஸ்பெக்டர் அவரை காலில் சுட்டுப்பிடித்தார். காலில் காயம் ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: