×

2வது நாளாக ஐடி ரெய்டு; பால் தினகரன், குடும்பத்தினரை கனடாவில் இருந்து சென்னைக்கு அழைத்து விசாரிக்க முடிவு: வெளிநாடு முதலீடு, சொத்து பத்திரங்கள் சிக்கின

சென்னை: பிரபல கிறித்தவ மத போதகருக்கு சொந்தமான சென்னை, கோவை உள்பட 25 இடங்களில் 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு முதலீடுகள், பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதால், பால்தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னை வரும் படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரபல கிறித்தவ மத போதகரான டி.ஜி.எஸ்.தினகரன் தொடங்கிய ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டங்கள் மற்றும் கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி தொடங்கி நடத்தி வந்தார்.

பின்னர் கடந்த 2008ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் தினகரன் தனது தந்தை நடத்திய ‘இயேசு அழைக்கிறார்’ குழுமம் மற்றும் காருண்யா பல்கலைக்கழக்தை தற்போது வழிநடத்தி வருகிறார்.
பால் தினகரன் நடத்தும் அறக்கட்டளைக்கு கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதி வந்ததாக கூறப்படுகிறது. அப்படி வந்த நிதியை குறைத்து கணக்கு காட்டி மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

அதைதொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து ஒரே நேரத்தில் பால் தினகரன் நடத்தும் சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இயேசு அழைக்கிறார் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான ஆவணங்கள் மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

28 இடங்களில் நடந்து வரும் சோதனையில் 3 இடங்களில் சோதனை முடிவடைந்துள்ளது. 25 இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்குகள், நன்கொடையாக பெறபட்ட பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக பால்தினகரன் கனடாவில் வசித்து வருகிறார். இதனால் அறக்கட்டளைக்கு வரும் வெளிநாட்டு நிதிஉதவிகளை அவர் கனடாவில் இருந்து நிர்வாகிகள் மூலம் கவனித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் பால் தினகரன் இ-மெயில் மற்றும் அறக்கட்டளைக்கான இ-மெயிலில் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பால் தினகரன் தற்போது கனடாவில் உள்ளார். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் உடனே இந்தியாவிற்கு வரும் படி பால் தினகரனுக்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் கைப்பற்றப்பட்ட அறக்கட்டளைக்கு வந்த வெளிநாட்டு நிதி உதவி மற்றும் அறக்கட்டளை பெயரில் நாடு முழுவதும் வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் பட்டியல், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை வைத்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இருந்து பால் தினகரன் இந்தியா வந்த பிறகு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Paul Dhinakaran ,Chennai ,Canada ,questioning , ID raid on 2nd day; Paul Dinakaran decides to take family from Chennai to Chennai for questioning: Foreign investment, property securities stuck
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்