முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது: சசிகலா விடுதலை, ஜெ. நினைவிடம் குறித்து விவாதிக்கப்படுகிறது

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27ம் தேதி திறக்கப்படுகிறது. அதேபோன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாக உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9.45 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் சுமார் ரூ..80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் வருகிற 27ம் தேதி திறப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை சென்னைக்கு அழைத்து வர அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று 27ம் தேதி நடைபெறும் விழாவில், போயஸ் கார்டன் வீட்டை பொதுமக்கள் பார்வைக்காக திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி அறிவிப்பு வெளியிட உள்ளார். வருகிற 28ம் தேதி முதல் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் இன்று அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விவாதிக்கிறார்கள்.

அடுத்து ஜெயலலிதா நினைவிடம் திறக்கும் நாளான 27ம் தேதி தான் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாலும், 27ம் தேதி விடுதலையாவது உறுதி என்றே கூறப்படுகிறது. அப்படியே சசிகலா விடுதலையானால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதனால், அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலா அணிக்கு செல்லாமல் தடுப்பது குறித்தும், அதிமுக கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு இந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட உள்ளது. ஆனாலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுக கட்சியில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றே தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதனால் இன்று நடைபெறும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories:

>