வீட்டில் ரகசிய பயிற்சி பட்டதாரி வாலிபரிடம் 3 துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கி பயிற்சி பெற்ற பட்டதாரி வாலிபரிடம் இருந்து 3 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் திருப்பதி குடை ரோட்டை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (23). இவர், பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நாய் குட்டிகளை வாங்கி விற்பனையும் செய்து வருகிறார். இவர், தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுப்பதாக அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜிக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருடன் தமிழ்செல்வன் வீட்டுக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அப்போது, அங்கு ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் இரு சிறிய துப்பாக்கிகள், இரும்பு குண்டுகள் இருந்தன அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை பலூன்களை சுட பயன்படுத்தும் ‘‘ஏர்கன்” வகையை சேர்ந்தவை என்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், தமிழ்செல்வனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி கூறினர். அதன்படி, அவர் நேற்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அம்பத்தூரில் பட்டதாரி வாலிபர் துப்பாக்கிகளை வைத்து வீட்டில் பயிற்சி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>