தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வரை வழிமறித்து அதிருப்தி அதிமுகவினர் புகார் மனு

தாம்பரம்: மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘‘இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால், செழிப்படைய வேண்டும் என்றால் அந்த நாட்டில் வேளாண் உற்பத்தி பெருக வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும். இதன் இரண்டிலும் வளர்ச்சி காண்கின்ற ஒரே அரசாங்கம் அதிமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.

 செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். இதில் 60 சதவீதத்துக்கு மேல் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் நேற்று பிரசாரத்தின் போது, முதல்வரை முற்றுகையிட்டு புகார் தெரிவிக்க காத்திருந்தனர். ஆனால் அவ்வாறு செய்தால் அது தேர்தல் நேரத்தில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும். எனவே முதல்வரிடம் புகாரை மனுவாக அளிக்கலாம். அவர் இந்த பிரச்னை குறித்து, பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர்  கூறினார்.

இதனை அடுத்து தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் கோபிநாத், கவுன்சிலர்கள் ஜான் எட்வர்ட், நாகூர் கனி உட்பட நிர்வாகிகள் முதல்வர் வந்த வாகனத்தை வழிமறித்து அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனு குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும், அவ்வாறு நல்ல முடிவை எடுக்கத் தவறும் பட்சத்தில் அது தேர்தல் நேரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதிருப்தி அதிமுகவினர் தெரிவித்தனர். முதல்வர் வருகையையொட்டி அதிகப்படியான கூட்டம் காட்டுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோரை அதிமுகவினர் அழைத்து வந்தனர். இவர்களுக்கு டோக்கன் வழங்கினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் அனைவரும் அதை அதிமுக நிர்வாகிகளிடம், காண்பித்து ரூ.200 பெற்றுக்கொண்டனர்.

Related Stories:

>