×

கவர்னர் உரையுடன் ஆரம்பம் பிப்ரவரி 2ல் சட்டசபை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 2ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடரிலேயே, இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக கவர்னர் உரையாற்றுவார். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் கூட்டம், ஜனவரி 2வது அல்லது 3வது வாரம் (பொங்கல் பண்டிகைக்கு பின்) நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு மற்றும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, முதல்வர் டெல்லி பயணம் உள்ளிட்ட காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழக ஆளுநர், சட்டப்பேரவையின் கூட்டத்தை 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி (செவ்வாய்) காலை 11 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தின் 3வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் கூட்டியிருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். இதையடுத்து சபாநாயகர் தனபால் அந்த உரையை தமிழில் படிப்பார். இருவரும் உரையாற்றி முடித்ததும் அன்றைய கூட்டம் உடனடியாக ஒத்தி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அநேகமாக, கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதால், பிப்ரவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிந்ததும், மீண்டும் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி, 2021ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முடிவை, சபாநாயகர் தலைமையில் 2ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆயுட் காலம் முடிய உள்ள நிலையில் கூடும் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.  அதேபோன்று, எதிர்க்கட்சிகளும், விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், கடைசி கட்ட டெண்டர் அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொள்ளாச்சி பாலியல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

* கொரோனா சோதனை கட்டாயம்
கலைவாணர் அரங்கத்தில்தான் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று, பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள், சட்டப்பேரவை ஊழியர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : speech ,Governor ,Assembly , Beginning with the Governor's speech, the Assembly convenes on February 2: the plan to table the interim budget
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...