கட்டணம் குறைக்க கோரி 44வது நாளாக மாணவர்கள் போராட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி திடீர் மூடல்: விடுதிகளை காலி செய்யவும் உத்தரவு

சிதம்பரம்:கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான அரசாணை இன்று வரை பிறப்பிக்கப்படாததால் முந்தைய நிர்வாக கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு கட்டணத்தைவிட இது பல மடங்கு அதிகம். இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று 44வது நாளாக  நீடித்தது.இந்தநிலையில், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், மருத்துவக் கல்லூரியை மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடுவதாகவும், கல்லூரி மாணவர்கள் விடுதிகளை மாலை 4 மணிக்குள் காலி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், ‘கல்லூரியை மூடுவதாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. எந்த பிரச்னை வந்தாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என உறுதியுடன் தெரிவித்தனர்.

ராமதாஸ் கண்டனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணமாக ரூ.11,600 வசூலிக்கப்படுகிறது. ஆனால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.5.44 லட்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் அதிகம். கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ரூ.11,600 ஆக குறைக்க வேண்டும். அதை விடுத்து கல்லூரியை மூடுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கட்டணத்தை குறைக்க வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில், ‘விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என மாணவர்களை மிரட்டுவது, அராஜகத்தின் உச்சக் கட்டம். தமிழக அரசே ஏற்று நடத்தும் முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.5.44 லட்சம். இது நியாயமற்றது. எனவே தமிழக அரசின் இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: