×

அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகிறது மதுபாட்டில் விலை விவரத்தை டாஸ்மாக் முன் வைக்க வேண்டும்: ரசீது வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகிறது, எனவே கடை முன் விலை விவரத்தை வைக்கவும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரி ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் முதுகெலும்பாக டாஸ்மாக் வருமானம் உள்ளது. ஆனால், விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. எனவே, கடந்த 2010 முதல் நடந்த விற்பனை விவரம், வருமானம் குறித்து அறிக்கை அளிக்கவும், விற்பனைக்குரிய ரசீது வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.  வக்கீல் ேஹமராஜ் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கடந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதில், அதிக வருவாய் கிடைப்பதால் மதுவிலக்கு அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.  இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விற்பனையாகும் ஒவ்வொரு பாட்டிலுக்கும்  ரசீது கொடுக்க வேண்டும். இதை யாரும் கடைபிடிப்பதில்லை. அதே நேரம் அதிக விலைக்கு விற்பது குறித்து ஏராளமான புகார்கள், வழக்குகள் வருகின்றன. எனவே, டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது ெகாடுக்க வேண்டும். அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விலைப்பட்டியல் விவரத்தை கடை முன்பு வைக்க வேண்டும். விற்பனை ரசீதை முறையாக பராமரிக்க வேண்டும்.  இதை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுதொடர்பான ஆவணங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்.6க்கு தள்ளி வைத்தனர்.



Tags : Complaints are being made that it is being sold at a high price.
× RELATED யானை தாக்கி விவசாயி பலி