போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த வாலிபரின் கை, கால்கள் முறிந்தது: ஒன்றரை டன் குட்கா, 2 வேன் பறிமுதல்: இருவர் கைது

கூடுவாஞ்சேரி: குட்கா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த வடமாநில வாலிபருக்கு கை, கால்கள் முறிந்தன. அவர்களிடம் இருந்து ஒன்றரை டன் குட்கா, 2 வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 1வது வார்டு மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், நேற்று அதிகாலையில் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஒரு வீட்டில் இருந்து, குட்கா பார்சல்களை கொண்டு வந்து வேனில் ஏற்றுவதை பார்த்தனர். உடனே போலீசார், அங்கிருந்த 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதை 2வது மாடியில் இருந்து பார்த்த வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து கீழே குதித்தார். இதில், அவரது 2 கை, கால்கள் முறிந்தன.

உடனே, அந்த வாலிபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில், சிக்கிய 2 பேரை, வேன் மற்றும் குட்கா பொருட்களுடன் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வேன் டிரைவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த அர்ஜுனன் (50), புளியந்தோப்பு முகமதுஜாபர் (36). மாடியில் இருந்து குதித்த வாலிபர், ராஜஸ்தானை சேர்ந்த ஹோம்ஸின் (24) என தெரிந்தது.  தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும், நேற்று காலை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை டன் குட்கா, 2 வேன்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>