காஞ்சிபுரம் சரிகை தொழிற்சாலையில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் காரணமின்றி தொழிலாளரை பணிசெய்ய அனுமதி மறுத்த நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் தமிழக அரசின் சரிகை தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு பணிக்கு வந்த நிரந்தரத் தொழிலாளியான ஸ்டீபன் ராஜ் என்பவரை, தொழிற்சாலை நிர்வாகம் உள்ளே விடாமல் காவலாளியை கொண்டு வெளியேற்றி உள்ளது. இதை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகி ரவி, சீனிவாசன் தலைமையில் தொமுச கவுன்சில் இளங்கோவன், அதிமுக சேகர் மற்றும் அருள், ஜனார்த்தனம், நந்தகோபால், நெடுஞ்செழியன் உள்பட ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் அடிப்படை வசதிகளை பறிக்கும் நிர்வாக இயக்குனரை கண்டித்து, தங்களது பணியை புறக்கணித்து தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மேலாண் இயக்குநர் ராஜேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வெளியேற்றப்பட்ட தொழிலாளியை மீண்டும் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு நிர்வாகம் சம்மதித்தது. இதையடுத்து அனைவரும் பணியை தொடர்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: