முஷ்டக் அலி டி20 காலிறுதியில் தமிழகம்

அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் முடிந்த நிலையில் காலிறுதிப்போட்டிகள் ஜன.26, 27 தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் காலிறுதியில் தமிழகம்-அரியானா அணிகள் மோத உள்ளன. கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சையத் முஷ்டக் அலி டி20 கோப்பை போட்டி  ஜன.10ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன. அவை எலைட் ஏ, பி, சி, டி, ஈ என 5பிரிவுகளில் தலா 6 அணிகளாக பிரிக்கப்பட்டன. பிளேட் பிரிவில் 8 அணிகள் விளையாடின.  லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் எலைட் ஏ, பி, சி, டி, ஈ என 5 பிரிவுகளிலும் முதலிடம்  பிடித்த  பஞ்சாப், தமிழ்நாடு, பரோடா, ராஜஸ்தான், அரியானா அணிகளும்,  பிளேட் பிரிவில் முதலிடம் பிடித்த பீகார் அணியும் காலிறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன.

எலைட் பிரிவுகளில் 2வது இடம் பிடித்த அணிகளில் முதல் 2 இடங்களில் உள்ள இமாச்சலபிரதேசம், நடப்பு சாம்பியன் கர்நாடகா ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.இந்த 8 அணிகளும் மோதும் காலிறுதிப் போட்டிகள்  அகமதாபாத்தில் நடக்கும். ஜன.26ம் தேதி நடக்கும்  முதல் காலிறுதியில் தமிழ்நாடு-அரியானா, 2வது காலிறுதியில் ராஜஸ்தான்-இமாச்சலபிரதேசம் அணிகள் மோதும். ஜன.27ம் தேதி நடைபெறும்  3வது காலிறுதியில் கர்நாடகா-பஞ்சாப், 4வது காலிறுதியில்  பீகார்-பரோடா அணிகளும் விளையாடும். அரையிறுதிப் போட்டிகள்  ஜன.29ம் தேதியும், இறுதிப் போட்டி ஜன.31ம் தேதியும் அகமதாபாத்தில் நடக்கும்.

தமிழகம் அசத்தல்

எலைட் பி பிரிவில் இருந்த தமிழ்நாடு அணி லீக் சுற்றில் விளையாடிய  5போட்டிகளிலும் அபார வெற்றிப் பெற்றது. ஜார்கண்டை 66ரன் வித்தியாசத்திலும், அசாமை 10விக்கெட் வித்தியாசத்திலும், ஒடிசாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும்,  ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்காலை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழத்தியது. கடந்த சீசனிலும் லீக் சுற்றில் ஒருப்போட்டியில் கூட  தோற்கவில்லை. இறுதிப் போட்டியில்  கர்நாடகாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று 2வது இடம் பிடித்தது.

வெளிமாநில ஆதிக்கம்

மத்திய, மாநில அரசு பணிகளை போன்று, வடமாநில வீரர்கள் பலர் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்துள்ளனர். இத்தனைக்கும் தமிழக வீரர்களான ஜெகதீசன், ஹரி நிஷாந்த், கேப்டன் தினேஷ் கார்த்திக்,  முருகன் அஷ்வின், சாய் கிஷோர், அபரஜித், ஜி.பெரியசாமி ஆகியோர் வாய்ப்பு கிடைக்கும் போது அசத்தியுள்ளனர்.

 வெளிமாநில வீரரே இல்லாமல், கடந்த சீசனில் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே தொடர்களில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்தது. இந்தமுறை வடமாநில வீரர்கள் ஆதிக்கம் காரணமாக தமிழக வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரவில்லை. மணிமாறன் சித்தார்த், பாபா இந்தரஜித் ஆகியோருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால்தான் திறமை காட்டி, ஐபிஎல், இந்திய அணிகளில் இடம் பிடிக்க முடியும். இருந்தும் வெளிமாநில வீரர்களை சேர்க்கும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன நெருக்கடியோ?

புதுச்சேரியில் போராட்டம்

தமிழ்நாடு அணியில் மட்டுமின்றி தென் மாநில அணிகள் எல்லாவற்றிலும் வட மாநில வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி அணியில் வெளி மாநில வீரர்களை சேர்த்ததை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. ஆனால் பலன் ஒன்றுமில்லை.

Related Stories:

>