பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து: டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் தூள்தூள்

வாஷிங்டன்: கடந்த ஆட்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் உலகளவில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளை, பதவியேற்ற முதல் நாளே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடித்து நொறுக்கினார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வாஷிங்டனில் பதவியேற்று கொண்டனர். அதன் பிறகு, தேர்தலில் அமெரிக்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதத்தில் ஒரே நாளில் 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார்.

அவற்றில் பெரும்பாலானவை, கடந்த ஆட்சியில் அதிபராக இருந்த டிரம்ப்பால் நீக்கப்பட்டவை. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு கொள்கை, குடியுரிமை சட்டங்கள், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது போன்ற முடிவுகளை அவர் எடுத்திருந்தார். நேற்று போட்ட 17 கையெழுத்துகளின் மூலம், அவற்றை எல்லாம் ரத்து செய்த பைடன், எல்லாவற்றையும் பழைய நிலைக்கே கொண்டு வந்துள்ளார்.

* வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றங்கள்.

* தேசிய பாதுகாப்பு கொள்கை முடிவுகள்.

* பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைதல்.

* உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இருந்து விலகியதை திரும்ப பெறுதல்.

* முஸ்லிம்கள் மீதான பயணத் தடையை நீக்குதல்.

* மெக்சிகோவில் எழுப்பப்படும் எல்லைச் சுவர் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்துதல்.

* கொரோனா தொற்று, பொருளாதார சிக்கல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை.

* முதல் 100 நாள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குதல்.

* பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை திரும்ப பெறுதல்.

* இன வேறுபாடுகளை வேரறுக்கும் கூட்டாட்சி அமைப்பு.

* அமெரிக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்பட 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.

இது ஆரம்பம்

மட்டும்தான்  நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பைடன் அளித்த பேட்டியில், “அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, நிர்வாக உத்தரவில் இன்று கையெழுத்திட்டிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இவை வெறும் நிர்வாக உத்தரவுகள் மட்டுமே. ஆனாலும்,  முக்கியமானவைகள். இன்னும் நிறைவேற்ற வேண்டியவை ஏராளமாக உள்ளன. இனிவரும் நாட்களில் இன்னும் நிறைய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட இருக்கிறேன். இவை அனைத்தும் ஆரம்பமே. விரைவில் அமெரிக்க பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர வகுப்பினரின் மீது பிரதான கவனம் செலுத்த உள்ளேன். இவற்றை தொடங்குவதற்கு இதை விட சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது,” என்றார்.

ஐநா , உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலும், உலக சுகாதாரஅமைப்பிலும் அமெரிக்கா மீண்டும் இணைவதை ஐநா பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரெசும், உலக சுகாதார அமைப்பின் தலைவரும் வரவேற்றுள்ளனர்.

பைடனுக்கு டிரம்ப் மனம் திறந்த கடிதம்

அமெரிக்காவில் பதவி விலகும் அதிபர், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதிய அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதி. அங்கிருக்கும் தீர்மானம் எடுக்கும் மேசையின் மீது விட்டு செல்வது மரபு. அதன்படி, முன்னாள் அதிபர் டிரம்ப் தனக்கு மனம் திறந்து கடிதம் எழுதி இருப்பதாக அதிபர் பைடன் நேற்று தெரிவித்தார். ‘‘டிரம்ப்புடன் பேசும் வரை அக்கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பது பற்றி சொல்ல மாட்டேன். ஏனெனில், அது மிகவும் அந்தரங்கமானது. ஆனால் அக்கடிதத்தை அவர் மிகவும் மனம் திறந்து பண்புடன் எழுதி உள்ளார்,’’ என்றார் பைடன். 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் முன்பாக பைடன் அக்கடிதத்தை வாசித்து பார்த்து, தானே வைத்துக் கொண்டார்.

டிரம்ப் தனிக் கட்சி?

நாடாளுமன்றத்தில் நுழைந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால், குடியரசு கட்சியில் டிரம்ப் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தி அடைந்துள்ள டிரம்ப், ‘பேட்ரியாட் பார்ட்டி’ (தேசபக்தர் கட்சி) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருண்ட காலத்திலும் கனவு காணவில்லை: முதல் உரையில் கமலா உருக்கம்

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். துணை அதிபராக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு இவர் ஆற்றிய முதல் உரையில்,  “நாம் கனவு மட்டும் காண்பவர்கள் அல்ல, எதையும் செய்ய கூடியவர்கள். இருண்ட காலங்களில் கூட நாம் யார் என்பதை இது காட்டி உள்ளது. அமெரிக்கர்கள் கண்ணுக்கு தெரிந்ததை மட்டும் பார்ப்பதில்லை. அதையும் தாண்டி, எதை பார்க்க முடியும் என்று நினைப்பவர்கள். அதனால்தான், நிலவில் கால் ஊன்றினோம். அமெரிக்கர்களின் விருப்பமே, இந்நாட்டின் பெண்களை வழி நடத்தி செல்கிறது.  அதுவே, அவர்களை சம உரிமை கோருவதற்கு தூண்டியது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய எனது தாய் என்னையும், எனது சகோதரி மாயாவையும் வளர்க்கும் போது, நாம் முதலில் வர முடியாவிட்டாலும், கடைசியாக இருக்கக் கூடாது என்று கூறி வளர்த்தார். அவர் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், இன்று என்னை இந்த இடத்தில் உயர்த்தி உள்ளது,” என்று உருக்கமாக பேசினார்.

Related Stories: