வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம்

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 70.50 அடியை கடந்துள்ளது. இதனால் சுமார் 10 கி.மீ., சுற்றளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வைகை அணை நீர் மட்டம் குறைவாகவே இருக்கும். நீர்மட்டம் குறையும் நேரத்தில் நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நீர்மட்டம் குறையும் போது அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அடுத்து நீர்மட்டம் உயரும் முன்னர் அறுவடையை முடித்து விடுவார்கள்.

இந்த நடைமுறை அணை கட்டப்பட்ட காலம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுப்பணித்துறையும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்த ஆண்டும் அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நீர்மட்டம் குறைவாக இருந்ததால், இனிமேல் நீர் மட்டம் உயராது என்ற நினைப்பில் விவசாயிகள் நிலத்தை உழுது சாகுபடி செய்தனர். பயிர்கள் முளைக்க தொடங்கிய டிசம்பர் மாதத்தில் மழை பெய்து, நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. டிசம்பர் கடைசி வாரம், ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேனி மாவட்டம் முழுவதும் அதிக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 70.50 அடியை எட்டியது.

அணையின் முழு கொள்ளளவை நீர்மட்டம் எட்டியதால் நீர் தேங்கி நிற்கும் பரப்பும் அதிகரித்தது. இதனால் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் முழுக்க நீரில் மூழ்கி உள்ளன. இதுபோல் நடக்கும் என தெரிந்தே சாகுபடி செய்ததால் தங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அணை நீர் மட்டம் உயர்ந்தது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>