மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்து ஒப்பாரி போராட்டம்

திருச்சி: தமிழகத்தில் கடந்த மாதத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் டெல்டாவில் லட்சகணக்கான ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களை மாநில குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நிவர் மற்றும் புரெவி புயலால் விவசாயிகள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில் தற்போது பெய்த பருவம் தவறிய கனமழையினால் மேலும் பயிர் சேதமடைந்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் பிரசாரம் துவக்கி உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உதவி செய்வதாக கூறி பிரசாரம் செய்து வருவதை கண்டித்தும்,

மழையினால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ₹30 ஆயிரம், வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ₹40 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹20 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், சீர்மரபினருக்கு டிஎன்டி என்ற ஒரே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மண்ணுலகில் வாழலாமா அல்லது விண்ணுலகத்திற்கு உங்களுடன் வந்து விடலாமா என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிடம் மனு அளித்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

முன்னதாக அப்பகுதியில் மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி அய்யாக்கண்ணு எம்ஜிஆர் சிலையில் கோரிக்கை மனுவை காலடியில் வைத்து ஒப்பாரி வைத்து உங்கள் கடைக்கண் பார்வையை முதல்வர் பக்கம் திருப்புங்கள் என கூறி கோஷமிட்டார். அதை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்யாக்கண்ணு உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>