சிவகாசி அருகே வறண்டு கிடக்கும்‘அனுப்பன்குளம் கண்மாய்’: விவசாயிகள் கவலை

சிவகாசி: சிவகாசி பகுதியில் தொடர் மழை பெய்தும் அனுப்பன்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள கண்மாய் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இக்கண்மாய் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அனுப்பன்குளம் மட்டுமின்றி மீனம்பட்டி, ஆண்டியாபுரம், பேராபட்டி, சுந்தரராஜபுரம், பாறைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பதும் இந்த கண்மாய்தான். இந்த கண்மாய்க்கு மழைக்காலங்களில் காட்டாறு, ஓடைகள் மூலமாக தண்ணீர் வரத்து இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தவறியதால் கண்மாய் வறண்டே கிடந்தது. சிவகாசி பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதில் சிவகாசியை சுற்றியுள்ள செங்குளம் கண்மாய், மங்களம் கண்மாய், கள்ளிபுதூர் கண்மாய், தொண்டை மதன்குளம் கண்மாய், புதுக்குளம் கண்மாய், செங்கமலபட்டி கண்மாய் உள்ளிட்டவையில் 70 சதவிகிதம் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அனுப்பன்குளம், கொத்தனேரி, குமிழங்குளம், பெரியகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை. இதனால், மழை பெய்தும் கண்மாய்கள் நிறையததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சென்று விடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜன் கூறுகையில்,‘‘ விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என்ற பெயர் அனுப்பன்குளம் கண்மாய்க்கு உண்டு. இந்த கண்மாயில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்த காலம்போய் தற்போது குடிநீருக்கே இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

Related Stories: