ஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்!

நன்றி குங்குமம்

கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் இயங்கவில்லை. தொலைக்காட்சி சேனல்களிலும் புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. டிக்டாக்கிற்கும் தடை. வீட்டை விட்டும் எங்கேயும் வெளியே வரமுடியாத சூழல். இந்நிலையில் யூ டியூப் சேனல்கள்தான் மக்களின் முக்கிய பொழுது போக்கு களமாக இருந்தது. அத்துடன் இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பையும் யூ டியூப் உருவாக்கித் தந்திருக்கிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக யூ டியூப் சேனல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் ஊரடங்கில் கலக்கிய சில சேனல்கள் குறித்த டேட்டாஸ் இதோ...

மிஸ்டர் தமிழன்

உலக சினிமாக்களை விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல், அதன் கதைகளை சுவாரஸ்யமாக சொல்வது ‘மிஸ்டர் தமிழன்’ சேனலின் சிறப்பு.

பாலமுருகன் என்பவர் இதனை நடத்தி வருகிறார். கணீரென ஒலிக்கும் அவரின் குரலும், சுமாரான படத்தின் கதையைக் கூட அசத்தலாகச் சொல்லும் அவரது பாணியும் சிறந்த கதை சொல்லியாக பார்வையாளர்களை அள்ளுகிறது.

‘‘சொந்த ஊர் மதுரை பக்கம் காரியாபட்டி. தனியார் நிறுவனத்துல மார்க்கெட்டிங் வேலை செய்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே உலக சினிமா மீது ஆர்வம். இயக்குநர் ஆகணும்ங்கிற கனவு எல்லாம் இல்லை. ஆனால், அது சார்ந்து அனைத்தையும் தெரிந்துகொண்டேன். ஈரான், கொரியன் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பேன். ‘தும்பாடு’னு ஒரு இந்திப்படம் பார்த்தேன் அதை கதை சொல்லல் முறையில் விமர்சனம் செய்தேன். எதிர்பாராத வீயூவ்ஸ் கிடைத்தது. அட... இது நல்லா இருக்கேனு தொடர்ந்து நிறைய வேற்று மொழிப்படங்களைப் பார்த்து கதையைச் சொன்னேன்.

கொரோனா காலத்துல மட்டும் ஆயிரத்துக்கும் மேலான சினிமாக்கள் பார்த்து அதை யூ டியூப்பில் பதிவுசெய்து வெளியிட்டேன். மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தாங்க. இப்ப மார்க்கெட்டிங் வேலையை விட்டுட்டு முழுநேரப் பணியா யூடியூப் பக்கம் வந்துட்டேன். எனக்கு உறுதுணையா இருப்பது மனைவி பவானி தான். அவங்க இல்லைன்னா என்னால இதை செய்திருக்க முடியாது...’’ என்கிறார் பாலமுருகன்.

வில்லேஜ் குக்கிங் சேனல்

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரம்பட்டியிலிருந்து இயங்குகிறது ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’. இதில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவும் 20 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டுவிடுகிறது. கிராமிய உணவுகளை அதன் பக்குவம் மாறாமல் இயற்கையான முறையில் சமைப்பது; தரமான கேமராவில் பதிவு செய்வது இதன் சிறப்பு.

‘‘2018ல் ஈசலைப் பிடித்து, அதை சுவையாக சமைத்து ஒரு வீடியோவாக்கினோம். நாங்கள் எதிர்பார்க்காத அளவு ஹிட் அடித்தது அந்த வீடியோ. தொடர்ந்து சமையல் வீடியோக்களைப் பதிவு செய்தோம். என் சித்தப்பா பெரியதம்பி திருமணங்களுக்கு சமையல் செய்பவர். அவரை வைத்து நிறைய வீடியோக்கள் செய்திருக்கோம். கூடவே தம்பி அய்யனார், முருகன் உதவிக்கு இருக்கின்றனர். அத்துடன் பல லட்சம் ஃபாலோயர்கள் எங்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றனர்...’’ என்கிறார் ‘வில்லேஜ் குக்கிங் சேனலை’ இயக்கும் சுப்ரமணியம். கிராமத்து வெள்ளந்தியாக அய்யனார் பேசிக்கொண்டே வீடியோவில் வலம் வருவது பலருக்கும் ஃபேவரிட். கிராமிய உணவைச் சமைத்து அனைவரின் நாவிலும் எச்சிலூற வைப்பவர் இவர். நாடு, மொழி கடந்து உலகம் முழுவதும் இந்தச் சேனலுக்கு ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உனக்கென்னப்பா

இந்தச் சேனலில் வெளியான ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸுக்கு செம மவுசு. இரண்டு சீசனைக் கடந்து பயணிக்கிறது. லாக்டவுனில்தான் ‘உனக்கென்னப்பா’ அதிகமாக ஹிட் அடித்தது. அதற்கு மூலகாரணமே இந்த சீரிஸ்தான். ஆபாசமில்லாமல் நெகிழ வைக்கும் குடும்பக்கதை, பவி டீச்சரின் அழகான முகம் என பட்டையைக் கிளப்பியது. சிறுவர் முதல் வயதானவர்கள் வரை பலர் ‘ஆஹா கல்யாணத்து’க்கு ரசிகர்கள். இதை இயக்கிய சரவணன், நடித்த அன்புதாசன் என அனைவருமே 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது ஹைலைட்.

யாமிருக்க பயமேன்

அனைத்து மதத்தினரும் விரும்பிப்பார்க்கும் ஆன்மீக சேனல், ‘யாமிருக்க பயமேன்’. குறிப்பாக கிரகப் பெயர்ச்சி பலன்கள், ஆன்மீகம் சார்ந்த தகவல்களும் அசத்தல். இதை நடத்தும் அருண்குமாரின் குரலுக்கும் அவர் சொல்லும் விதத்திற்கும் பல லட்சம் மக்கள் ரசிகர்கள்.‘‘பூர்வீகம் விக்ரவாண்டி. பரம்பரை பரம்பரையா ஜோதிடம் சொல்லிட்டு இருந்தோம். எங்க அப்பா ஜோதி, இந்த பகுதி முழுக்க பிரபலமான ஜோதிடர். வெளிநாடுகளில் இருந்துலாம் வந்து ஜோசியம் பார்த்துட்டு செல்லுவாங்க.

அதேபோல தாத்தா பாலசுப்ரமணியம், தாய் வழி தாத்தா குழந்தைவேல் ஆகியோரும் மிகவும் பிரலமான ஜோதிடர்கள். சென்னையில் பிரபலமான கல்லூரியிலதான் எஞ்ஜினிரிங் படித்தேன். படிக்கும்போது ஜோதிடத்தின் மேல் பெரிய ஆர்வம் இல்லை. அப்பாவும் தாத்தாவும் ஜோசியம் பார்க்கும்போது ஜன்னல் வழியா வேடிக்கை பார்ப்பேன். என் வாழ்வில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அதை ஜாதகத்தில் கணித்தபோது தெரிந்து கொண்டேன். பிறகுதான் ஜோதிடத்தில் தீவிரமாக இறங்கினேன்.

‘யாமிருக்க பயமேன்’ என்ற யூ டியூப் சேனலை எதார்த்தமாகத்தான் துவங்கினேன். எதிர்பாராத அளவு மக்களிடம் சென்றது. எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஜோதிடம் பார்க்கிறேன் என்று என் குடும்பத்தில் பலருக்கும் வருத்தம். மிகவும் பிடித்து, கடவுளின் மீதான காதலுடன்தான் இந்தச் சேவையை செய்து வருகிறேன்...’’ என்றார் அருண்குமார்.

குல்ஃபி

உலகளவில் ப்ராங்க் ஷோ மிகவும் பிரபலம். இதில் சிறிது மாற்றம் செய்து கலக்கி வருகிறது ‘குல்ஃபி’யின் ப்ராங்க் ஷோ. சாலையில், ஹோட்டலில், பொது இடங்களில் கண்ணில் படும் ஒவ்வொருவரையும் ப்ராங்க் செய்வது ‘குல்ஃபி’ சிவாவின் பணி. யாரையும் அச்சப்படுத்தாமல் ப்ராங்க் செய்வது இவரின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு ப்ராங்க் ஷோவும் ‘குல்ஃபி’யில் வெளியாகி பார்வையாளர்களை அள்ளும். குறிப்பாக இவர் பெண்களை ப்ராங்க் செய்வது அசத்தலாக இருக்கும்.

‘‘யூ டியூப்பில் ப்ராங்க் ஷோ பக்கம் திரும்ப ‘ப்ளாக் ஷீப்’ சித்துதான் காரணம். அவர் பணணுகிற ஷோக்களைப் பார்த்துதான் நானும் ப்ராங்க் பண்ணத் துவங்கினேன். ஆனால், அவரது ஸ்டைலைப் பின்பற்றாமல் என் பாணியில் செய்தேன். மதுரையில இருந்து சென்னை கிளம்பி வந்த பல லட்சம் பேரில் நானும் ஒருவன். சினிமா ஆர்வத்தால் சற்று அதிகமாகவே அவதிப்பட்டேன். எஞ்சினியரிங் படித்து இருந்தாலும் கட்டட வேலையும் பார்த்திருக்கேன்.

அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வாய்ப்பு தேடினேன். உதவி இயக்குநர், எடிட்டிங் போன்ற மற்ற தொழில்நுட்ப வாய்ப்பு தேடி வருபவர்கள் கூட ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால், நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வருபவர்கள் மற்றவர்களைவிட அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். போட்டோ ஆல்பத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆபீசாக மணிக் கணக்கில் அலைந்தேன். இடையில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தேன். ஈவன்ட் ஷோ, லோக்கல் டி.வி சேனல் என பயணித்து சென்ற ஆண்டு ‘குல்ஃபி’ யூ டியூப் சேனலை ஆரம்பித்தேன். 14 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்...’’ என்றார் சிவா.

தொகுப்பு: திலீபன் புகழ்

Related Stories: