அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி...! மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கட்டுவதற்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

பாஜக சார்பில் கூப்பன் வாயிலாக நன்கொடை திரட்டும் பிரச்சாரம் சமீபத்தில் டெல்லியில் துவங்கியது. இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு தன் குடும்பத்தின் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியளிப்பதாக கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். தனிச் சிறப்பு வாய்ந்த ராமர் கோயில் கட்டுவது அனைத்து இந்தியர்களின் கனவாகும். நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது ஒற்றுமையும், அமைதியும்தான் நிலவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம் கோயில் கட்டுமானத்திற்காக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ரூ.5,00,001 நன்கொடையாக அளித்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஸ்ரீ ராம் ஜம்பூமி தீர்த்த க்ஷேத்ராவின் தூதுக்குழுவிற்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் தொகையை வழங்கினார்.

Related Stories: