அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்ட புகார்.: விசாரணைக்கு உத்தரவிட்ட மதுரை ஆட்சியர்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வென்றதாக எழுந்த புகார் குறித்து கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.  

அந்த புகாரில் கூறியவது, முதல் சுற்றில் 33-வது எண் பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் களமிறங்கியுள்ளார். 3 சுற்றுகளுக்கு பின் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அந்த நம்பர் உள்ள பனியனை கழற்றி, மற்றொரு நபரிடம் அதாவது கண்ணன் என்பவரிடம் வழங்கிவிட்டு, சுற்றிலிருந்து அந்த நபர் வெளியேறி உள்ளார்.

அதனையடுத்து அந்த பனியனை அணிந்துகொண்டு களமிறங்கிய கண்ணன் 12 காளைகளை பிடித்துள்ளதாக கணக்கிடப்பட்டு, அவர் முதலிடம் பெற்றதாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு கருப்பண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனால் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு முதல் பரிசை பெற்றதாக கருப்பண்ணன் என்பவர் மதுரை ஆட்சியர்யிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வென்றார்களா? என்று விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டி வீடியோ காட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோட்டாட்சியருக்கு மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: