நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் அனுமதி மறுப்பு: மேடையை அகற்றியதால் சின்னப்பம்பட்டி மக்கள் வேதனை

சின்னப்பம்பட்டி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டியில் பாராட்டு விழா நடத்த  உள்ளூர் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி விழாவுக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பாராட்டு விழாவுக்கான மேடை அகற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி, சிட்னியில் இருந்து இன்றுஅதிகாலை நாடு திரும்பியது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

யார்க்கர் மூலம் டிவில்லியர்ஸ் உள்பட முன்னணி வீரர்களை திணறடித்து விக்கெட் எடுத்த நடராஜன், ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி வீரராக இடம் பெற்றார். ஆனால் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் ஒருநாள், டி.20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார். கிராமத்தில் இருந்து சென்று சாதனை படைத்த நடராஜனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடராஜன், இன்று தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். சின்னப்பம்பட்டி திரும்பும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கிராம மக்கள் மட்டுமல்லாமல், நடராஜனின் கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்த சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக நேற்று இருந்தே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதாவது சின்னப்பம்பட்டியில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் மட்டுமல்லாது, பேருந்து நிலையத்தில் இருந்து அவரை ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் சின்னப்பம்பட்டியில் நடராஜன் வீட்டு அருகே ஒரு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மேடை அமைக்கப்பட்டு அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது மட்டுமல்லாது அவரை சந்திக்க வருவோர் அவருக்கு புங்கொத்து கொடுக்கவும், அவருக்கு சால்வை அனுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் இங்கு வந்து அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கிரிக்கெட் அகாடமியின் நிர்வாகத்தினரை சந்தித்து இந்த விழாவை நடத்த கூடாது.

கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடக்கூடாது என்ற வகையில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் மேடையை அகற்ற கூறினார்கள். அதன் அடிப்படியில் அமைக்கப்பட்டுள்ள மேடை அகற்றப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அந்த பந்தலும் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: