நிவர் புயல் பாதிப்பு..! விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரம்-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை புறநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.

புயல் மழைக்கு 4 பேர் பலியானார்கள். ஏராளமான நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. வாழை, பப்பாளி, தென்னை மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணம் ரூ.10,000 வழங்கப்படும் என்றும், நெற்பயிர், நீர்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணம் ரூ.20,000 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிவர் புயலால், ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. மழை பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர், விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>