8 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி கிராம மக்கள் கிடா வெட்டி கொண்டாட்டம்

சின்னசேலம்: சின்னசேலம் ஏரி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்து தண்ணீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் கிடா வெட்டி பூஜை செய்து கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய ஏரி, கோமுகி அணை கால்வாய் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீரால் நிரம்புகிறது. இந்த ஏரியின் மூலம் சின்னசேலம் நகர பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். பெத்தானூர், ஈசாந்தை உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளும் பயன் பெறுகின்றனர்.  நீர்வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய பொதுப்பணித்துறையும், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகவே கடத்தூர், தெங்கியாநத்தம், தென்செட்டியந்தல் உள்ளிட்ட ஏரிகளுக்கு மட்டுமே நீர்வரத்து இருந்தது.

 சின்னசேலம் ஏரிக்கு வருவதற்குள் அணையில் நீர் வடிந்து விடும். காந்தி நகர், அண்ணா நகர் பகுதி மக்களுக்கு 40 நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைத்து வந்தது.

 மக்களின் நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அதிக நீர் ஏரிக்கு வந்தது. இதனால் நேற்று  சின்னசேலம் ஏரி நிரம்பி வழிய துவங்கியது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் மற்றும் பொதுப்பணித்துறை  உதவி பொறியாளர் பிரபு தலைமையில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர்.

Related Stories: