6 அடிக்குமேல் மண் மேடானது ஆக்கிரமிப்பால் மாயமான வீடூர் அணை: முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத அவலம்

வறட்சியான விழுப்புரம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், விவசாயம் பெரும்பாலும் கிணறு மற்றும் ஏரிப்பாசனத்தை மட்டுமே நம்பியிருந்தது.  மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை சேமித்தால் விவசாய உற்பத்திக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு வீடூர் பகுதியில்  சங்கராபரணி மற்றும் தொண்டி ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் 1958ம் ஆண்டு 1911 ஏக்கர் நிலப்பரப்பில் விடூர் அணை கட்டப்பட்டது. அணை  32 அடி அளவுக்கு நீரை தேக்கி வைத்து பயன்படுத்தும்  வகையில் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் வானூர், மயிலம், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2,200 ஏக்கரும்,  புதுச்சேரி மாநிலத்தில் பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர்  உட்பட 3500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணைக்கு நீர்வரத்தானது செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெய்யும் மழை  சங்கராபரணி மற்றும் தொண்டி ஆறுகள் வழியாக வீடூர் அணைக்கு வந்து சேரும். தற்போது  அணை அமைந்துள்ள சங்கராபரணி மற்றும் தொண்டி ஆறுகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக முழு கொள்ளளவான 32 அடியை நீர் எட்டவில்லை.  இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையில் 32 அடிக்கு  நீர் தேங்கியுள்ளது. அணையில் 6 அடிக்கு மேல் மண் துர்ந்து மேடாகிப்போனதால்,  அதிகப்படியான நீரை தேக்கி வைக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.  அணையின் மொத்த பரப்பளவில்  1911 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும், நீர் பிடிப்பு பகுதிகள் மெல்ல சுருங்கி வருகிறது. இதன்காரணமாக அணையில் நீர் தேக்கி வைக்க முடியாமல் உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது.  தற்போது உச்ச நீதிமன்றம் நீர்நிலை பகுதிகளில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து அங்கனிக்குப்பத்தை சேர்ந்த மலர்மன்னன் கூறுகையில், வீடூர் அணை 32 அடியில்  6 அடிக்கு மேல் மண் தூர்ந்து  26 அடி ஆழம் மட்டுமே உள்ளது. அணை கட்டப்பட்ட நாள் முதல் தற்போது வரை அணை திறக்கப்படும் நாளில் மட்டும் பெயரளவுக்கு வண்ணம் பூசப்பட்டு அணையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் சி.வி சண்முகம் தூர் வாருவதற்கான பணியை பெயரளவில் தொடங்கினார். ஆனால் முழுமையாக தூர் வாரப்படவில்லை. எனவே கோடை காலம் வரை தண்ணீர் தேங்காமல் வறட்சி ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அணையை ஆழப்படுத்த வேண்டும் என்றார்.

பூங்காவை சீரமைக்க வேண்டும்

சங்கர், வீடூர்:வீடூர் அணை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா பகுதியாகவும் விளங்குகிறது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வீடூர் அணை கறையானது 4 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இந்த கரையின் மீது வாகனங்கள் வரும் அளவிற்கு சாலை வசதியும் உள்ளது. ஆனால் இந்த வழியில் கதவானது  எப்பொழுதுமே மூடப்பட்டு கிடக்கிறது.  தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வழியை திறந்து,  வாகனங்களை அவ்வழியாக அனுமதித்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்தால் நீண்ட தொலைவிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அணையின் முழு தோற்றத்தையும் காண்பதற்கு வசதியாக இருக்கும். இதேபோல் அணையில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரித்து பொழுதுபோக்கு அம்சங்களை அதிகப்படுத்தினால் வெளியிலிருந்து வரும் பார்வையாளர்களை மிகவும் கவரும் வண்ணம் இருக்கும்.

அணை முழுவதும் ஆக்கிரமிப்பு

ராஜா, வீடூர்: வீடூர் அணை 1911 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அணை முழு கொள்ளளவை எட்டினால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது போக எப்பொழுதுமே நீர் இருக்கும்.ஆனால் வீடூர் அணை சுற்றியுள்ள பாதிரிப்புலியூர், வீடூர் உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைகிறது. ஆகையால் அணையை சுற்றி நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, அணையை ஆழப்படுத்த வேண்டும்.

ஜெயராமன், வீடூர்: வீடூர் அணைக்கு இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இருப்பினும் அதிக அளவிலான நீர் வீணாகி வயல்வெளி பகுதிக்கு சென்றது. இதற்கு முக்கிய காரணம் சங்கராபரணி ஆறு மற்றும் தொண்டி ஆறு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக ஆறுகள் தூர்வாரப்படாததாலும்,  அணைக்கு நீர்வரத்து குறைந்தது. ஆகையால் அணைக்கு வரும் நீர்வரத்து பகுதிகளில் தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.

Related Stories: