ராணிப்பேட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1,600 டன் உரங்களுடன் முதல் சரக்கு ரயில் ஓட்டம்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டைரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1600 டன் உரம் மூட்டைளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை முதல் சரக்கு ரயில் ஓட்டம் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய, சரக்கு ரயில் போக்குவரத்து சேவையின் துவக்க பணிகளை வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து ராணிப்பேட்டைவரைசென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் கடந்த அக்டோபர் மாதம்5 ம் தேதி ஆய்வு செய்தார். தொழில் நகரமான ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வாகன போக்குவரத்து முதன்மையாக உள்ளது.

சரக்கு ரயில் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் கிடப்பில் உள்ள திண்டிவனம்-நகரி ரயில் பாதை மூலம் ராணிப்பேட்டை வரை கூட்ஸ் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கூட்ஸ் ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார்.அதன்பேரில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ராணிப்பேட்டை வரை பராமரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன.இந்நிலையில், வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ளராணிப்பேட்டைவரை 2 ரயில் இஞ்ஜின்கள் மூலம் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி தொடங்கியது. தொடர்ந்து, ரயில் நிலைய இருபுறங்களிலும் தரைதளம் அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்திற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் பூஜைகள் போடப்பட்டது.

இதனை தொடர்ந்து, 25 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வந்தது. பின்னர், 21 பெட்டிகளில் 1600 டன் எடையுள்ள சிங்கல் சூப்பர் பாஸ்பேட் உரம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் சரக்கு ரயில் ஓட்டத்தை ரயில்வே சீனியர் டிவிஷன் கமர்ஷியல் மேலாளர் ஹரிகிருஷ்ணன், கூட்ஸ் கிளார்க் ஹரி, சீப் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மார்டின் ஜான்பால், டிராபிக் இன்ஸ்பெக்டர் கிரிஷ் குமார், வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளர் விஜயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கூட்ஸ் ரயில் ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த தாடே பள்ளிக்கூடம் டோராபுரி தொழிலுக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: