ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறதா பாஜக!: காவல்துறையால் தேடப்படும் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி பா.ஜ.க-வில் இணைந்தார்..!!

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையால் தேடப்பட்டு வரும் பெண் தாதா எழிலரசி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் பெண் தாதா எழிலரசி, இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு, வெடிகுண்டு பதுக்கல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றது மற்றும் மதுக்கடையை மிரட்டி அபகரிக்க முயன்ற வழக்கில் காவல்துறையினர் எழிலரசியை தேடி வருகின்றனர்.

பாரதிய ஜனதாவில் தமிழகம், புதுவை ரவுடிகள் அதிக எண்ணிக்கையில் இணைவது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுவாமிநாதனை சந்தித்த பெண் தாதா எழிலரசி, தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார். எழிலரசியை சால்வை அணிவித்து புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுவாமிநாதன் வரவேற்றுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சிவககுமார் கொலை வழக்கில் எழிலரசி முக்கிய குற்றவாளியாவார்.

ஏற்கனவே சோழன், விக்கி, பாம் வேலு ஆகிய கொலை குற்றவாளிகள் புதுச்சேரி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ள நிலையில், அந்த பட்டியலில் பெண் தாதா எழிலரசி சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சீர்காழி சத்யாவும் பாரதிய ஜனதாவில் நேற்று இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>