அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!

மும்பை: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்து 50,096 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 50,052 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 14, 709 புள்ளிகளாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 30,000த்திற்கும் கீழ் சென்ற சென்செக்ஸ் 10 மாதங்களில் ஏறக்குறைய 23,000 புள்ளிகள் அதிகரித்து 50,000 புள்ளிகளை தொட்டுள்ளது.

அமெரிக்காவின் பங்கு சந்தைகள் வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில் முடிவடைந்தன. இது புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், விரைவில் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மற்றொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டாலரின் மதிப்பும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.

குறிப்பாக ஆசிய சந்தைகளும் வரலாற்று உச்சத்தில் உள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக  தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன. இதனால் உற்பத்திப் பொருட்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளைவிட உயர்ந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: