அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தலைவர்கள் இதயம் கனிந்த வாழ்த்து..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவின் அதிபராக பதிவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கும் மோடி, அமெரிக்கா - இந்தியா உறவை மேலும் மேம்படுத்த பைடனுடன் இணைந்து பணியாற்றிட ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக பதிவிட்டுள்ளார். சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் ஒருமையுடன் செயல்படுவோம் என்று மோடி உறுதி கூறியுள்ளார். வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களில் இருநாடுகளுக்குமிடையே ஒற்றுமைகள் உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்து தெரிவித்து மோடி ட்விட் செய்துள்ளார். கமலா ஹாரிஸ் பதவியேற்றிருப்பது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று மோடி பதிவிட்டுள்ளார்.

ராகுல்காந்தி வாழ்த்து:

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியிருக்கிறார். அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு:

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கும் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திருக்கிறார். இருநாடுகளின் உறவு பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிப்புகளால் ஆனது என்றும் வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்கள் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் தருணங்களுக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன்:

இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன் தனது வாழ்த்து ட்விட்டில், கொரோனா, பருவநிலை மாற்றம், ஜனநாயகத்தை பாதுகாத்தல் என இருநாடுகளின் நோக்கமும் ஒன்று தான் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தும், அமெரிக்காவும் இணைந்து குறிக்கோளை அடைய பாடுபடுவோம் என்று போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்:

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும், அமெரிக்க அதிபருக்கும், துணை அதிபருக்கும் ட்விட்டரில் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் உறுதியான எதிர்காலத்திற்கு ஒன்றாக இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கும் மேக்ரான், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு மீண்டும் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories: