காணொலி மூலம் டெல்லியில் இன்று நடைபெறும் வேளாண் சட்டம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இ-மெயிலில் இந்தியில் கடிதம்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சை: வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், வேளாண் சட்டங்களுக்கு அண்மையில் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதற்காக சுப்ரீம் கோர்ட், பாரதிய கிசான் யூனியனின் தேசியத் தலைவர் பூபேந்தர் சிங் மன், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவிலிருந்து பூபேந்தர்சிங் கடந்த வாரம் விலகியதையடுத்து 3 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு இ-மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் தலைப்பும், கையெழுத்தும் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால் கூட்டம் பற்றிய தகவல்கள் இந்தியில் உள்ளது. இது, தமிழக விவசாயிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியில் அச்சிட்டு, மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளனர் என விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார் கூறுகையில், 3 வேளாண் சட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (21ம் தேதி) காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க மெயிலில் இந்தியில் கடிதம் வந்துள்ளது. ஆய்வுக்குழுவில் உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள விவசாயிகளை புறக்கணிக்க வேண்டும், தமிழக விவசாயிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்தி மொழியில் கடிதம் அனுப்பி, கண்துடைப்பிற்காக கூட்டம் நடத்துகின்றனர். இதுபோன்ற செயலால் வேளாண் சட்டத்தை பற்றி எங்களது கருத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றார்.

Related Stories: