மதுரையில் தொடர் மழையால் இரட்டை மாடி வீடு பூமிக்குள் புதைந்தது

மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை எதிரொலியாக, 2 மாடிகளைக் கொண்ட வீடு திடீரென நேற்று மண்ணுக்குள் புதைந்தது. மதுரை, தெற்கு வெளிவீதி காஜா தெரு, மீனாட்சி பள்ளம் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். தரைத்தளம் மற்றும் 2 மாடிகளைக் கொண்ட இவரது வீட்டின் கீழே இரு கடைகள், ஒரு வீடு, மாடிகளில் தலா ஒரு வீடு என மொத்தம் 3 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். கீழிருக்கும் கடைகளில் ஒன்றில் ஜெயபால் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த அடுக்கு மாடி வீடு திடீரென மண்ணுக்குள் புதைந்தது.

தரைத்தளத்தில் இருந்த 2 கடைகளும், ஒரு வீடும் பூமிக்குள் புதைந்ததால், அருகே இருந்த மற்றொரு வீட்டின் மீது இந்த வீடு சாய்ந்தது. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடி உயிர் தப்பினர். மாடி வீட்டில் இருந்த நாகலட்சுமி (65) வலது கையில் முறிவு ஏற்பட்டது. பிரியா (25) என்பவரும் காயமடைந்தார். இவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து மதுரை நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, ‘‘இது தாழ்வான பகுதி என்பதால் எப்போதும் தண்ணீர் தேங்கும்.

சமீபத்திய மழையால் இங்கு தண்ணீர் தேங்கி வீடு ஊறி இருந்துள்ளது. 1995ல் கட்டப்பட்ட இந்த வீடு தரைத்தளம் மெல்ல உள்ளே புதைந்து, அருகே உள்ள வீட்டின் மீது சாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்’’ என்றனர். அதிகாரிகள் வந்து மின் வயர்களை அகற்றினர். புதைந்து நின்ற வீட்டை புல்டோசர் மூலம் மாநகராட்சியினர் அகற்றினர்.

Related Stories:

>