தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை?

புதுடெல்லி: அடுத்த ஓரிரு மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்த இருக்கும் நிலவரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகம் உட்பட விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்துவது, பாதுகாப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கடந்த 12ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிடம் தீவிர ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அடுத்த ஒரு வாரத்தில் இந்த வருகையான இருக்கும் என தெரிய வருகிறது. அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை எப்படி நடத்துவது, அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்னவாக உள்ளது. மொத்த வாக்குப்பெட்டியின் தேவைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாநில தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து புதுவையில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவுக்கு பிறகு அடுத்த ஓரிரு வாரங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பு உள்ளது.

Related Stories: