×

நடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: நடிகை  சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக  காவல்  துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சின்னத்திரை நடிகை சித்ரா, டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார்  சித்ராவின்  கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என தெரிவித்திருந்தார். எந்த குற்றமும் செய்யாத  தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது  நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நேற்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்றார். தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கில் இடையீட்டு மனுதாரரக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ம் தேதிக்கு  தள்ளி வைத்தார்.

Tags : Chitra ,suicide ,High Court , Actress Chitra commits suicide on suspicion of misconduct by her husband: Report filed in High Court
× RELATED சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை...