10ம் கட்ட பேச்சிலும் முடிவு எட்டவில்லை ஒன்றரை ஆண்டுக்கு சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு யோசனை: நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 10ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு சட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்றும் மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 56வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர். மத்திய அரசு விவசாயிளுடன் நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 10ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கிய இப்பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோருடன் 40 விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். சமீபத்தில், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தை விவசாயிகள் எழுப்பினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். பின்னர், வேளாண் சட்டங்களை நீக்குவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அரசு தரப்பில், புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுக்கு இந்த சட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் இருதரப்பு கூட்டுக் கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எட்டலாம் என்றும் அமைச்சர்கள் யோசனை தெரிவித்தனர். கமிட்டி அறிக்கை அளிக்கும் வரையில் சட்டங்கள் அமல்படுத்தப்படாது, அதுவரை விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறப்பட்டது.

இதை விவசாயிகள் நிராகரித்தனர். ஆனாலும், தங்களுக்குள் கலந்து பேசி இறுதி முடிவை இன்று கூறுவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த 10ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வரும் 22ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நிச்சயம் தீர்வு எட்டும் என அமைச்சர் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயி தற்கொலை

டெல்லி திக்ரி எல்லையில் போராடி வந்த அரியானா மாநிலம், ரோதக் மாவட்டத்தை சேர்ந்த ஜெய் பகவான் ரானா (42) என்ற விவசாயி நேற்று போராட்ட களத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘இப்போராட்டத்தில் ஏதோ ஒன்றிரண்டு மாநில விவசாயிகள் மட்டும் பங்கேற்பதாக அரசு கூறுகிறது. நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் இங்கு போராடுகின்றனர். இது இயக்கமல்ல, பிரச்னையை எதிர்த்து நடக்கும் சண்டை’’ என கூறி உள்ளார். இதுவரை போராட்ட களத்தில் தற்கொலை செய்தும், கடும் குளிராலும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: