வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்

டாக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேசம் 6விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் உசேன், ஆந்த்ரே மெக்கார்த்தி, கெமார் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா, கைல் மேயர்ஸ், நிக்ருமா போன்னர் ஆகியோர் அறிமுகமானார்கள். அந்த அணியில் பாதிக்கு மேற்பட்டவர்கள் புதுமுக வீரர்களாக இருக்க, வங்கதேச அணியில் ஹசன் முகமது அறிமுகமானார்.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 32.2 ஓவரில் 122 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 40, ரோவ்மன் பாவெல் 28, கேப்டன் ஜேசன் முகமது 17 ரன் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 4, அறிமுக வீரர் ஹசன் முகமது 3, முஸ்டாபிசுர் ரகுமான் 2, மெஹிதி ஹசன் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 50 ஓவரில் 123 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் தமிம் இக்பால் 44, ஷாகிப் அல் ஹசன் 19, முஷ்பிகுர் ரகீம் 19* ரன் எடுத்தனர். உதிரியாக 19 ரன் கிடைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரர் அகீல் உசேன் 3. ஜேசன் முகமது 1 விக்கெட் எடுத்தனர். ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் தொடர்ந்து 6வது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழத்தியுள்ளது. 2 அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டியும் டாக்காவில் நாளை நடக்கிறது.

Related Stories: