7 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2 லட்சமாக குறைந்தது

புதுடெல்லி: நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி, சிகிச்சை பெறுவோர், குணமடைந்தோர் விவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

*  நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 மாதங்களுக்கு பிறகு நேற்று 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

*  இதில் 72 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் உள்ளனர்.

* 207 நாட்களுக்கு பிறகு, வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆக இருந்தது.

*  கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேர் குணமடைந்துள்ளனர்.

*  இதுவரை 18 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 947 பேரிடம் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7 லட்சத்து 64 ஆயிரத்து 120 பேருக்கு மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

7.86 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், 1 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நேற்றைய நிலவரப்படி, இதுவரை நாட்டில் உள்ள 7 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அமைச்சர் பலி

தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா பரவி  உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதில், ஆட்சியாளர்களும் தப்பவில்லை. வெளியுறவு அமைச்சரான சிபுசிசோ மோயோ நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. ஜிம்பாப்வேயில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ராபர்ட் முகாபேவின் ஆட்சிக் காலத்தில் சிபுசிசோ முன்பு ராணுவ ஜெனரலாகவும் பணியாற்றியவர். அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி ஏற்படுத்தி புதிய அரசு அமைய உதவியவர். இதன் காரணமாகவே புதிய அதிபர் எமர்சன், இவருக்கு வெளியுறவு அமைச்சர் பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: