கலவர வழக்கில் ஜாமின் உத்தரவு

புதுடெல்லி: தீயிட்டு வீட்டை எரித்ததாக தொடரப்பட்ட வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில், 2 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அரங்கேறிய வன்முறைகளில் 53 பேர் பலி, 300 பேர் காயம், கோடிக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டது. அது தொடர்பாக 700க்கும் அதிக வழக்குகளில் 1,700க்கும் அதிகமான நபர்கள் விசாரணை கைதிகளாக மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் ஜாப்ராபாத் பகுதியில் வீட்டை தீயிட்டு சாம்பல் ஆக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிலர், ஜாமின் கோரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கில் 2 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏப்ரலில் சிறைக்கு அனுப்பப்பட்ட இருவரும், குற்றத்தின் தன்மையை ஒப்பிடுகையில், விசாரணைக்கைதியாக நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். மேலும் அவர்களுடன் கைதான வேறு சிலர் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ளனர். எனவே, சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனும் உத்தரவாதம், ரூ.25,000 பிணை மற்றும் அதற்கு ஈடாக ஒருவர் உத்தரவாதம் அளிக்கும் நிலையில் ஜாமினில் செல்ல அனுமதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Related Stories: