காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காஞ்சிபுரம்: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் மாவட்டதில் நேற்று காலை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய வந்த முதல்வர், காஞ்சிபுரம் வடக்கு மாட வீதியில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், அமைச்சர் பென்ஜமின், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, எம்எல்ஏ பழனி, மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் இருந்தனர்.

அப்போது அவர், வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 2019 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் அத்திவரதர் சயன கோலம், நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண உலகம் முழுவதும் இருந்து சுமார் 1 கோடியே 7 லட்சம் பேர் காஞ்சிபுரம் வந்தனர். இது ஜெயலலிதா அரசுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து காஞ்சிபுரம் தேரடி பகுதியில் முதல்வர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள மஸ்ஜித் அஸ்ரத் பள்ளிவாசலில் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. இதை கேட்டதும் அவர், தனது பிரசாரத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். தொழுகை முடிந்த பிறது மீண்டும் பிரசாரத்தை தொடர்ந்தார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காந்தி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறு வணிகர்கள், நெசவாளர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுமார் 70 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் 4 பேருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதால், முதல்வரிடம் தங்கள் குறைகளை நேரடியாக கூறலாம் என வந்த தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக மற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில், காந்தி சாலை ஒருவழி பாதையாக மாற்றம் செய்ததை ரத்து வேண்டும். வியாபாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும். பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என நெசவாளர்கள், சிறு வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா பாதிப்பால் சுமார் 10 மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது தளர்வுகள் அறிவித்து, கடைகள் திறந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தவேளையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அடிக்கடி அரசியல் கட்சி கூட்டங்கள் நடக்கிறது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

ராமானுஜர் கோயிலில் தரிசனம்

வரும் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கினார். முதலில், ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமானுஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதிமுக மாவட்ட துணை செயலாளர் போந்தூா் செந்தில்ராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஒரத்தூர் சுந்தர், இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் சுபாஷ் சார்பில், முதல்வருக்கு மேளதாளங்களுடன், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே திறந்த வேளில் பிரசாரத்தை தொடங்கினார்.

பிரமாண்ட வரவேற்பு

வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். இதையொட்டி, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இருபுறமும் வாழை மரங்களை கட்டி, கும்ப மரியாதையுடன், மயிலாட்டம், தாரை தப்பட்டைகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாலாஜாபாத் அருகே முத்தியால்பேட்டையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித்குமார் பிரமாண்ட மலர்மாலையை முதல்வருக்கு வழங்கினார்.

Related Stories:

>