இறுதி பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்கள் அதிகம் : 18 வயது நிரம்பிய 9 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. 18 வயது நிறைவடைந்த 9 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி,  மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் இருந்தனர். அதை தொடர்ந்து, தமிழகத்தில் 1.1.2021ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்கள் 4 நாள் நடத்தப்பட்டது.

2020 நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21.39 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 5.09 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.32 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.84 லட்சம் பேர் என மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கையில் ‘டாப்’

தமிழகத்தில் நேற்று வெளியான வாக்காளர் பட்டியலின்படி, சென்னை  மாவட்டத்தில் 40,57,360 வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் இதுதான் ஒரு மாவட்டத்தில் அதிகபட்ச வாக்காளர்களை கொண்டுள்ள மாவட்டமாக சென்னை மாறி உள்ளது. குறைந்தபட்ச வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள  வாக்காளர்களின் எண்ணிக்கை 5,85,049.

கன்னி வாக்காளர்கள்

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் அமையவிருக்கும் புதிய சட்டமன்றத்துக்கான தேர்தலில் வாக்களிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அந்த வகையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக 8,97,694 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். இவர்களின் பெயர் இந்த புதிய வாக்காளர்  பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஓட்டு தீர்மானிக்கும்?

தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6 கோடியே 26  லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளனர்.  இதில் ஆண்  வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேரும் உள்ளனர்.

மெகா தொகுதி எது?

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டம்  சோழிங்கநல்லூர் தொகுதி தான் அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மாறி உள்ளது. அதாவது, இந்த தொகுதியில் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு எதிர்மாறாக குறைந்தபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை, துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1,76,272 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

5 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 6 கோடியே 27 லட்சம் வாக்காளர் உள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் இடம் மாற்றம், இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் சேர்க்கப்பட்டுள்ளது. 3,09,292 பேருக்கு அவர்கள் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1,75,365 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்ேடாரில் இருந்து `voter helpline App’ செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலமும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் தொடர்பான தகவல்களை மாவட்ட தொடர்பு மையங்களில் உள்ள 1950 என்ற எண்ணிலும், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள 180042521950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் வாரியாக வாக்காளர்கள் விவரம்

மாவட்டம்    ஆண்    பெண்    3ம் பாலினத்தவர்    மொத்தம்

சென்னை        1995581    2060698    2082    40,57,360

திருவள்ளூர்    1730117    1767940    772    34,98,829

காஞ்சிபுரம்        641462    673685    182    13,15,329

வேலூர்        612857    651091    140    12,64,088

கிருஷ்ணகிரி    805518    793220    280    15,99,018

தர்மபுரி        637891    622857    161    12,60,909

திருவண்ணாமலை    1013774    1055220    97    20,69,091

விழுப்புரம்        833206    851082    216    16,84,504

சேலம்        1495165    1508771    204    30,04,140

நாமக்கல்        701104    739937    160    14,41,201

ஈரோடு        953767    1003332    104    19,57,203

நீலகிரி        281762    303270    17    5,85,049

கோவை        1509531    1552799    414    30,62,744

திண்டுக்கல்    912943    960280    215    18,73,438

கரூர்        431934    464699    80    8,96,713

திருச்சி        1133020    1199635    231    23,32,886

பெரம்பலூர்        282560    293392    34    5,75,986

கடலூர்        1055291    1086436    208    21,41,935

நாகப்பட்டினம்    658437    682815    53    13,41,305

திருவாரூர்        514536    535963    70    10,50,569

தஞ்சாவூர்        1000709    1055671    168    20,56,548

புதுக்கோட்டை    665376    683516    72    13,48,964

சிவகங்கை        580722    601082    73    11,81,877

மதுரை        1321153    1364316    202    26,85,671

தேனி        551826    572479    195    11,24,500

விருதுநகர்        812683    855875    193    16,68,751

ராமநாதபுரம்    576343    581132    65    11,57,540

தூத்துக்குடி        724484    757151    164    14,81,799

திருநெல்வேலி    662326    690732    101    13,53,159

கன்னியாகுமரி    782936    784488    203    15,67,627

அரியலூர்        262998    267017    10    5,30,025

திருப்பூர்        1163767    1188733    285    23,52,785

கள்ளக்குறிச்சி    558394    555371    211    11,13,976

தென்காசி        653540    680262    78    13,33,880

செங்கல்பட்டு    1346543    1369458    384    27,16,385

திருப்பத்தூர்    473591    487195    72    9,60,858

ராணிப்பேட்டை    500626    527127    51    10,27,804

மொத்தம்        3,08,38,473    3,18,28,727    7,246    6,26,74,446

Related Stories: