சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. 18 வயது நிறைவடைந்த 9 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் இருந்தனர். அதை தொடர்ந்து, தமிழகத்தில் 1.1.2021ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்கள் 4 நாள் நடத்தப்பட்டது.
2020 நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21.39 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 5.09 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.32 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.84 லட்சம் பேர் என மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கையில் ‘டாப்’
தமிழகத்தில் நேற்று வெளியான வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் 40,57,360 வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் இதுதான் ஒரு மாவட்டத்தில் அதிகபட்ச வாக்காளர்களை கொண்டுள்ள மாவட்டமாக சென்னை மாறி உள்ளது. குறைந்தபட்ச வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,85,049.
கன்னி வாக்காளர்கள்
தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் அமையவிருக்கும் புதிய சட்டமன்றத்துக்கான தேர்தலில் வாக்களிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அந்த வகையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக 8,97,694 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். இவர்களின் பெயர் இந்த புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஓட்டு தீர்மானிக்கும்?
தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேரும் உள்ளனர்.
மெகா தொகுதி எது?
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி தான் அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மாறி உள்ளது. அதாவது, இந்த தொகுதியில் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு எதிர்மாறாக குறைந்தபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை, துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1,76,272 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
5 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 6 கோடியே 27 லட்சம் வாக்காளர் உள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் இடம் மாற்றம், இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் சேர்க்கப்பட்டுள்ளது. 3,09,292 பேருக்கு அவர்கள் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1,75,365 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்ேடாரில் இருந்து `voter helpline App’ செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலமும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் தொடர்பான தகவல்களை மாவட்ட தொடர்பு மையங்களில் உள்ள 1950 என்ற எண்ணிலும், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள 180042521950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டம் வாரியாக வாக்காளர்கள் விவரம்
மாவட்டம் ஆண் பெண் 3ம் பாலினத்தவர் மொத்தம்
சென்னை 1995581 2060698 2082 40,57,360
திருவள்ளூர் 1730117 1767940 772 34,98,829
காஞ்சிபுரம் 641462 673685 182 13,15,329
வேலூர் 612857 651091 140 12,64,088
கிருஷ்ணகிரி 805518 793220 280 15,99,018
தர்மபுரி 637891 622857 161 12,60,909
திருவண்ணாமலை 1013774 1055220 97 20,69,091
விழுப்புரம் 833206 851082 216 16,84,504
சேலம் 1495165 1508771 204 30,04,140
நாமக்கல் 701104 739937 160 14,41,201
ஈரோடு 953767 1003332 104 19,57,203
நீலகிரி 281762 303270 17 5,85,049
கோவை 1509531 1552799 414 30,62,744
திண்டுக்கல் 912943 960280 215 18,73,438
கரூர் 431934 464699 80 8,96,713
திருச்சி 1133020 1199635 231 23,32,886
பெரம்பலூர் 282560 293392 34 5,75,986
கடலூர் 1055291 1086436 208 21,41,935
நாகப்பட்டினம் 658437 682815 53 13,41,305
திருவாரூர் 514536 535963 70 10,50,569
தஞ்சாவூர் 1000709 1055671 168 20,56,548
புதுக்கோட்டை 665376 683516 72 13,48,964
சிவகங்கை 580722 601082 73 11,81,877
மதுரை 1321153 1364316 202 26,85,671
தேனி 551826 572479 195 11,24,500
விருதுநகர் 812683 855875 193 16,68,751
ராமநாதபுரம் 576343 581132 65 11,57,540
தூத்துக்குடி 724484 757151 164 14,81,799
திருநெல்வேலி 662326 690732 101 13,53,159
கன்னியாகுமரி 782936 784488 203 15,67,627
அரியலூர் 262998 267017 10 5,30,025
திருப்பூர் 1163767 1188733 285 23,52,785
கள்ளக்குறிச்சி 558394 555371 211 11,13,976
தென்காசி 653540 680262 78 13,33,880
செங்கல்பட்டு 1346543 1369458 384 27,16,385
திருப்பத்தூர் 473591 487195 72 9,60,858
ராணிப்பேட்டை 500626 527127 51 10,27,804
மொத்தம் 3,08,38,473 3,18,28,727 7,246 6,26,74,446