×

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம்: உலக வங்கியிடம் இருந்து 800 கோடி பெறுவதில் சிக்கல்

* 5 ஆண்டுகளாகியும் சுணக்கம் காட்டும் அதிகாரிகள்
* நெடுஞ்சாலை துறையில் பரபரப்பு

சென்னை: சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உலக வங்கியிடம் இருந்து 800 கோடி நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 62 ஆயிரம் கி.மீ சாலைகள் உள்ளது. இந்த சாலைகளை அதிகரித்து  வரும் போக்குவரத்துக்கேற்ப அகலப்படுத்துவது, புதிய சாலைகளை் அமைக்க  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் என்ற அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக வங்கியின் நிதியுதவியை 1800 கோடியும், மாநில அரசின் பங்களிப்பாக 3371 கோடி ஆக மொத்தம் 5171 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த கடந்த 2015ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம்  1170 கி.மீ நீள சாலையை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்பதே இதன் நோக்கம்.

ஆனால், இந்த திட்ட பணிகளுக்கு சாலைகளை தேர்வு செய்து திட்ட அறிக்கை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 5 ஆண்டுகளுக்கு இப்பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தில் ஆற்காடு-திருவாரூர் சாலை, நாகப்பட்டினம்-தூத்துக்குடி சாலை 581 கோடியில் 5 ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, ஒட்டன் சத்திரம்-தாராபுரம்-திருப்பூர் சாலை 713 கோடியில் முடிக்கப்பட்டன. மேலும், 280 கோடியில் கோபி-ஈரோடு சாலை, 462 கோடியில் 462 கோடியில் திருநெல்வேலி-தென்காசி சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலை பாதுகாப்புக்கு 120 கோடி மற்றும் 109 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்தும் பணிகளை தொடங்கப்படவில்லை. இதனால்,  உலக வங்கி நிதி பாதியை கூட செலவிடப்படவில்லை. குறிப்பாக, கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை 1000 கோடி வரை மட்டுமே உலக வங்கி நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 800 கோடி வரை செலவழிக்கப்படவில்லை. இந்த சூழலில் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சாலை மேம்பாட்டு திட்டம் இரண்டாவது கட்ட பணிகளை முடிக்க உலக வங்கி கெடு விதித்துள்ளது. தற்போதைய நிலையில், டெண்டர் விட்டு பணிகளை தொடங்கினாலும், அடுத்து ஒரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால், இப்பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில் உலக வங்கி நிதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், தமிழக ெநடுஞ்சாலைத்துறை சார்பில் மீண்டும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு கடிதம் எழுத திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Tags : completion ,World Bank , Delay in completion of Tamil Nadu Road Development Project: Problem in getting Rs 800 crore from World Bank
× RELATED உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது