தமிழகத்திற்கு 2வது கட்டமாக 5 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: தமிழகத்திற்கு 2வது கட்டமாக, 5.8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கப்பட்டது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக  5.36 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. இதன் மூலம் தமிழகத்தில் 166 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 5.08 லட்சம் டோஸ், கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு நேற்று அனுப்பியது. விமானம் வாயிலாக சென்னை வந்த தடுப்பு மருந்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:  

தமிழகத்துக்கு கூடுதலாக 5.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதுவரை, 10.65 லட்சம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. ஒருவருக்கு இரண்டு தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும். தற்போது, இருப்பில் உள்ள மருந்தை கொண்டு, 5.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்தில் முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் 6 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதில் பலருக்கு தயக்கம் இருந்தது. தற்போது, அனைத்தும் சரியாகி விட்டது. சுகாதார பணியாளர்கள் தயக்கமின்றி தடுப்பூசியை போட்டு கொள்கின்றனர். நானும் வரும் 22ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>