முதலாமாண்டு மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்பு துவங்கியது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள்  நேற்று தொடங்கியது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் துவங்குவது குறித்து அனைத்து அரசு மற்றும் தனியார்  கல்லூரிகளின் முதல்வருக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு  சுற்றறிக்கை அனுப்பினார். அதில், மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு 20ம் தேதி தொடங்க வேண்டும். முறையான  வகுப்புகள் பிப்ரவரி 2ம் தேதியில்  தொடங்கலாம். மாணவர்களுக்கு கொரோனோ  தொற்றை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளை  செய்ய வேண்டும். ஆள்மாறாட்டத்தை தடுக்க அனைத்து மாணவர்களின் கல்வி, சாதி  உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிப்பார்க்க வேண்டும். மாணவர்களின்  பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் சமீபத்திய  புகைப்படத்தை பெற வேண்டும்.

அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு  செய்ய வேண்டும். பின்னர் அனைத்து ஆவணங்களையும் மருத்துவக் கல்வி  இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு அறிமுக வகுப்புகள் நேற்று தொடங்கியது. தெர்மல் ஸ்கேன் உள்ளிட்ட கொரோனோ  தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் செய்த பின்னரே மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அறிமுக வகுப்புகள் நடைபெற்றன.

Related Stories: