ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்ததால் கிருஷ்ணா நீர் இப்போது தேவையில்லை: நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்ததால் கிருஷ்ணா நீர் தற்போதைக்கு தேவையில்லை. ஏப்ரல் மாதத்துக்கு பிறகு 6 டிஎம்சி தந்தால் போதும் என கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தண்ணீர் தரப்படுகிறது. இதற்காக, கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரியம் மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், உறுப்பினராக உள்ள மாநலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, கிருஷ்ணா நீர் செயற்பொறியாளர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, தற்போது தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் தேவையில்லை. எனவே, தற்போது கிருஷ்ணா நீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில், வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்கு பிறகு சென்னை மாநகரில் தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருவது வழக்கமாக உள்ளது. எனவே, வரும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு கிருஷ்ணா நீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 6 டிஎம்சி வரை கிருஷ்ணா நீர் தரப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ஒப்பந்தப்படி மீதமுள்ள 6 டிஎம்சி நீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு, ஆந்திரா அதிகாரிகள் சார்பில், தற்போது ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தரப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று கூறியதாக தமிழக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

>