தமிழகத்தில் 35 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளில் இயங்கும் 35 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அதற்கான ஆசிரியர் பணியிடங்களையும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணை: 2020-2021ம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் 1-5ம் வகுப்புகள் தொடக்க பள்ளிகளாக நிலை இறக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப்படும் 35 பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. மேற்கண்ட 35 பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது.

இவற்றில் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஈர்த்துக் கொள்ளவும், இதர பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பவும் அனுமதிக்கப்படுகிறது. நிலை இறக்கப்படும் 105 வகுப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர்பணியிடம் வீதம் 35 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>