விமான நிலைய ஊழியர் திடீர் மரணம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் கமர்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றியவர் பசுபதிராஜன்(57). அயனாவரத்தை சேர்ந்த இவருக்கு நேற்று பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில்,  சிகாகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு நடைமேடை 25ல் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வந்த பார்சல்களை கணக்கெடுக்கும் பணியில் பசுபதிராஜன்  ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்  திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.  அங்கு பசுபதிராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் அவர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.  இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>